May, the Month of Mary, மக்களின் மனங்களில் நிறைந்திருப்பவள் புனித கன்னி மரியாள்!


மக்களின் மனங்களில் நிறைந்திருப்பவள்
புனித கன்னி மரியாள்!


கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் மரியாள் வணக்கம் சிறப்பிடம் பெறுவது பேருண்மை. ஏனெனில் இறைவனுக்குகந்த இதயம் உடையவளாக விளங்குபவள் எம் அன்னை. மக்கள் இறைவனை நாடவும், தம் வாழ்வால் இறைவனைப் பிரதிபலிக்கவும் கற்றுகொடுத்து வழிகாட்டுபவர் அன்னையே. திருமறைத் தந்தையர்களும், திருச்சபையோடு ஒன்றுபட்ட இறைவல்லுனர்களும், 'மரியாள் துணையின்றி எந்த மனிதனும் ஈடேற்றம் அடைய முடியாது' என்று கற்பித்தனர். இறைவனின் மீட்புத்திட்டத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது 'மனுவுருவான அந்த அன்பு மகனாலே, அவருடைய இரத்தத்தின் வழியாய் இறைவனின் அருள் வளத்திற்கேற்ப நாம் மீட்படைகிறோம்' (எபே 1:7). 'கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசுக் கிறிஸ்துவே. இவர் அனைவரின் மீட்புக்காக தம்மையே கையளித்தார்' (1திமோ 2:5-6). ஆனால் அவர் இம் மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற மனுக்குலத்தின் பிரதிநிதியாக புனித மரியாளையே தேர்ந்து கொண்டார். மரியாளோ 'ஆகட்டும்' (γένοιτό μοι κατὰ τὸ ῥῆμά σου. லூக் 1,38) என்னும் வாக்குறுதியால் இறைவனுக்கு கீழும், அவருடனும் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் மீட்புத் திட்டத்தில் பங்கேற்றாள் என சங்கவுரை கூறுகிறது. இதனால் அன்னையின் அளவற்ற வல்லமையை நம்பி, அன்னைக்குரிய அன்புணர்வோடு அவள்பதம் வரும் மக்களின் மனங்களில் அன்னை நிறைந்திருப்பது கண்கூடு.

இறைவனின் நித்திய திட்டத்தில் மரியாளின் பொறுப்பு எத்தகையது என்பதைப் பற்றி திருத்தந்தை 10ம் பத்திநாதர் அழகாகக் கூறுகிறார். கன்னி மரியாளுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையே உள்ள மன ஒன்றிப்பு, பாடுகளின் ஒன்றிப்பு என்பவற்றால் மரியாள் கிறிஸ்துவோடு இணைந்து மனுக்குல மீட்புக்கு காரணமானாள். கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தை சிந்தி சம்பாதித்த பெறுபேறுகளை பகிர்ந்தளிப்பவளாக மரியாள் காட்சி தருகிறாள். ஆதலால் அவளே வரங்களை வளங்கும் முதல் பணியாளராகிறாள் என்கிறார் திருத்தந்தை. இவ்வாறு திருச்சபையின் தலைவர்களும், தந்தையர்களும் மரியாள் வணக்கத்தின் மேன்மையினையும், நாம் செபமாலை முலமாக செபிக்க வேண்டியதன் தேவையினையும், முக்கியத்துவத்தினையும் எமக்கு கற்பிக்கி;றார்கள். மரியாவின் பரிந்துரை மூலமாக வரலாற்றில் திருச்சபை சாதித்த வெற்றிகளை சான்றாக கொண்டு மரியாள் ஊடாக இறைவனைப் புகழ, வைகாசி மாதத்தினை மரியாவின் வணக்க மாதமாக திருச்சபை கொண்டாடி வருகிறது

மரியாள் என்னும் மறைபொருள், இறைவனின் ஞானத்திலே அவரது மேலான திட்டத்திலே தோன்றியதொன்றாகும். இதன் உண்மைத் தன்மையை ஆழ்ந்த விதத்திலே சிந்தித்து அவற்றின் ஒளியில் நமது விசுவாச வாழ்வை கட்டியெழுப்புவதுதான் மரியாள் வணக்கத்தின் நோக்கமாகும். எனவே மரியாள் வணக்கம் என்பது வெறும் உணர்ச்சி சம்மதந்தமானதொன்றல்ல. அவ்வாறிருப்பின் மரியாளை நாம் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் அர்த்தம். நற்செய்தியில், மரியாள் இறைவனின் வார்த்தையை ஏற்று அதன்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்ற மாதிரிகையுள்ள கன்னியாக, பொறுப்புள்ள ஓர் அன்னையாக சித்தரிக்கப்படுகிறாள். கடவுளின் திட்டத்தில் நம்பிக்கை கொண்டு, அவர் செயலிலே ஓர் தெளிவைப் பெற்று, இயேசுவை யாரென தன் உள்ளத்தில் சரியாக இனங்கண்டு, அவருடைய சீடர்களுக்கும், மக்களுக்கும் இயேசுவை வாழ்வதற்கு மாதிரிகை காட்டியவளர்தான் அன்னை மரியாள்

கிறிஸ்தவர்களாகிய எமது விசுவாச வாழ்வில் நடுநாயகமாகத் திகழ்பவர் கிறிஸ்துவே. அவரது பாடுகள், மரணம், உயிர்ப்பு என்ற மறைபொருளில்தான் எமது கிறிஸ்தவ விசுவாசம் கட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் கிறிஸ்துவோடு இணைந்து மனுக்குலத்தின் மீட்புக்காக தன்னை தியாகம் செய்த அன்புத் தாயாக எமது அன்னையை எம் மனங்களில் சுமப்பதும் எமது செபங்களில் இணைப்பதும் தகுதியானதே. அன்னையை 'அம்மா' என்ற உன்னத வார்த்தை மூலமாக உறவு கொண்டாடும் நாம், அன்னையின் வாழ்வில் ஒளிர்விட்ட சிறந்த பண்புகளும் மதிப்பீடுகளும் எமது வாழ்விலும் உருவம் பெற அன்னையின் மூலமாக செபிக்க வேண்டும். வாழ்வின் அன்றாட பிரச்சினைகளையும், சவால்களையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ள செமாலை தியானம் எம்மை இட்டுச் செல்லவேண்டும். இந்த மனநிலையோடு இம்மாதம் முழுவதும் மரியாவோடு இணைந்து இறைவனின் அருளை நாடுவோம். இம்மானிலத்தின் ஈடேற்றத்திற்காக அன்னையை மாதிரிகையாக்கி இயேசுவின் வழியில் இறைவனிடம் செபிப்போம்

அம்மா மரியே
கடவுளின் உன்னத படைப்பு நீவீர்,
இயேசு ஆண்டவர் தந்த உன்னத பொக்கிசம் நீவீர்,
தூய ஆவியாரின் மாசில்லாத இருப்பிடம் நீவீர்,
திருச்சபையின் தாயும், முதல் மகளும் நீவீர்,
உம்மைப் பற்றிக்கொண்டு, எம் அன்பு ஆண்டவரை
சென்றடைய உதவி செய்தருளும், ஆமென்


அருட் தந்தை. றமேஸ் ..தி

கருத்துகள்